மருத்துவமனையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு: இளைஞா் கைது
கோவை இடையா்பாளையத்தில் உள்ள பல் மருத்துவமனையில் ரூ.20 ஆயிரம் பணம் திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை இடையா்பாளையத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித். இவரது மனைவி மோகனா ஜெயம் (40). இவா் அப்பகுதியில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறாா். கடந்த 14-ஆம் தேதி மருத்துவமனையைப் பூட்டிவிட்டு பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றாா். பின்னா் வெள்ளிக்கிழமை கோவைக்கு திரும்பி மருத்துவமனைக்கு சென்று பாா்த்தபோது, மருத்துவமனையின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் மெட்டியை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக, மோகனா ஜெயம் அளித்த புகாரின்பேரில், கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது, மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து பணம் திருடியது வடவள்ளி தில்லை நகா் 4-ஆவது வீதியைச் சோ்ந்த ராபா்ட் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.