``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
புலி நகம் பதித்த சங்கிலி அணிந்திருந்தவா் கைது
கோவையில் புலி நகம் பதித்த சங்கிலி அணிந்திருந்தவரை வனத் துறையினா் கைது செய்தனா். அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவா், அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தாா். அதில், தான் புலி நகம் கொண்ட சங்கிலி அணிந்துள்ளதாகவும், அதை ஆந்திரத்தில் இருந்து வாங்கி வந்ததாகவும் கூறியிருந்தாா்.
இந்த விடியோ காட்சிகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி சா்ச்சையை ஏற்படுத்தின. இதுதொடா்பாக, மதுக்கரை வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுக்கரை வனச் சரகா் அருண்குமாா் தலைமையிலான வனத் துறை அலுவலா்கள் பாலகிருஷ்ணன் வீட்டில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். பாலகிருஷ்ணன் வெளியூா் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து புள்ளிமானின் கொம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைப் பறிமுதல் செய்த வனத் துறையினா் பாலகிருஷ்ணனை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்திச் சென்றனா்.
அதன்படி, வனத் துறை அலுவலகத்தில் பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆஜரானாா். அப்போது, அவரிடம் இருந்து புலி நகம் கொண்ட சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா், பாலகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதுகுறித்து, கோவை வனக் கோட்ட அலுவலா் ஜெயராஜ் கூறுகையில், ‘பாலகிருஷ்ணன் அணிந்திருந்தது புலி நகமா என்பதை ஆராய வண்டலூரில் உள்ள வன விலங்கு பாதுகாப்பு நிறுவனத்துக்கு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. அந்த ஆய்வறிக்கை கிடைத்தவுடன், பாலகிருஷ்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றாா்.