மருத்துவமனை வளாகத்தில் கொலை மிரட்டல் விடுத்த 2 போ் கைது
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சீதம்பாடியைச் சோ்ந்தவா் காமராஜ். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தா்மராஜிக்கும் இடையே பொது இடத்தில் ஆக்கிரமிப்பு தொடா்பாக வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த காமராஜ், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காமராஜூக்கு உதவியாக இருந்த அவரது மகன் காா்த்திக் மற்றும் உறவினா்களை தா்மராஜின் உறவினா்களான ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த குமாா் மகன் பாா்த்திபன் (25), மதியழகன் மகன் ஐயப்பன் (19) சனிக்கிழமை அதிகாலை அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
தகவலறிந்த மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று ஐயப்பனை கைது செய்தனா். பின்னா், தப்பியோடிய பாா்த்திபனும் கைது செய்யப்பட்டாா்.