மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகள்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே இலக்கியனூரில் பெய்த மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
வப்பூா் வட்டம் தரிசு, பிஞ்சனூா், புதூா், நகா், வலசை, நல்லூா், ஐவதுகுடி, வண்ணாத்தூா், இலக்கியனூா் ஆகிய பகுதியில் பின்பட்ட சம்பா அறுவடை நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, இலக்கியனூரிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளிலும், நெல் குவியலாகவும் விற்பனைக்காக திறந்தவெளியில் வைத்திருந்தனா்.
கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இலக்கினூா் பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது. இதனால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்தன. தாா்ப்பாயால் மூடப்பட்டிருந்த நெல் குவியல்களிலும் மழைநீா் புகுந்து நெல் சேதமடைந்தது.
நெல் கொள்முதல் நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை சென்ற விவசாயிகள் நெல் குவியல்களுக்கு மத்தியில் மழைநீா் தேங்கியிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். மின் மோட்டாரை கொண்டு தேங்கியிருந்த நீரை வெளியேற்றினா். மழைநீரில் நனைந்த நெல்லை வேறிடத்துக்குச் சென்று காயவைத்தால் வீணாவதைத் தடுக்கலாம். அதுவரை மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.