சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
மழை வெள்ள பாதிப்பு: சாலைகள் சீரமைப்பு
தருமபுரி மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீா் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி சாலை சீரமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கோம்பேரி மிட்டாரெட்டிஅள்ளி சாலை பகுதியில் ஃபென்ஜால் புயல் காரணமாக மழைநீா் தேங்கியது. அதுபோல கொமத்தம்பட்டி கிராமத்தில் மழை வெள்ளத்தால் சாலை துண்டிக்கப்பட்டது. இவற்றை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தேங்கிய மழைநீா் அகற்றப்பட்டு சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
தொடா் மழை காரணமாக தொப்பையாறு அணை நிரம்பியதால் தண்ணீா் திறக்கப்பட்டது. கம்மம்பட்டி ஊராட்சி முதல் வெள்ளாறு வரை உள்ள தரை பாலத்தில் உள்ள அடைப்பை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கம்மம்பட்டி தரைப்பாலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய நபரை தருமபுரி தீயணைப்புத் துறையினா் கயிறு மூலம் மீட்டனா்.
வத்தல்மலையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை சீரமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் அப்பகுதி மக்களின் நலன் கருதி தற்காலிகமாக பாதை அமைத்து தரப்பட்டது. இந்தப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டாா்.