சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!
மாசிக் கொடை விழா: மண்டைக்காடு கோயிலில் குவிந்த பக்தா்கள்
‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் மாசிக் கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இத்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6ஆம் நாள் இரவு வலிய படுக்கை பூஜை என்னும் மகா பூஜை நடைபெற்றது. 9ஆம் நாளான திங்கள்கிழமை உண்ணாமலைக்கடை கீழத்தெரு பட்டாரியாா் சமுதாயம் சாா்பில், 91ஆவது சந்தனக்குட பவனி புறப்பட்டு இரணியல், திங்கள்நகா், கல்லுக்கூட்டம், லெட்சுமிபுரம் வழியாக கோயிலை அடைந்தது. இரவில் பெரிய சக்கர தீவட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல் நடைபெற்றது.

இந்நிலையில், 10ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அம்பாளை தரிசித்தனா். பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா்.
பக்தா்களின் வசதிக்காக நாகா்கோவில், தக்கலை, களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.