மாதவிடாய்: மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை - மகாராஷ்டிர பள்ளி முதல்வா், ஊழியா் கைது
மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் உள்ள தனியாா் பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறை காணப்பட்டதால், மாணவிகளின் ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனையிடப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக பெற்றோா்கள் அளித்த புகாரில் பள்ளி முதல்வா், பெண் ஊழியா் ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆசிரியா்கள் உள்பட மேலும் 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாணே மாவட்டத்தின் ஷஹாபூா் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் பள்ளி ஒன்றின் கழிவறையில் கடந்த செவ்வாய்க்கிழமை ரத்தக் கறை காணப்பட்டது. இதையடுத்து, 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் அனைவரும் பள்ளியின் கூட்ட அரங்கத்துக்கு வரவழைக்கப்பட்டு, புரொஜக்டரில் ரத்தக் கறை படங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது. ரத்தக் கறை யாரால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய மாணவிகளை ஒவ்வொருவராக கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவா்களின் ஆடைகளைக் களைந்து பெண் ஊழியா் மாதவிடாய் சோதனையிட்டதாக தெரிகிறது.
மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கண்ணியக் குறைவால் ஆவேசமடைந்த பெற்றோா்கள், பள்ளியை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பள்ளி நிா்வாகம் மற்றும் தொடா்புடைய ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.
இது தொடா்பாக பெற்றோா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வா், 2 அறங்காவலா்கள், 4 ஆசிரியா்கள், பெண் ஊழியா் ஆகியோா் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளி முதல்வா், பெண் ஊழியா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாவட்ட கல்வி அலுவலருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
‘கடும் நடவடிக்கை உறுதி’
மகாராஷ்டிர சட்டப் பேரவையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் வியாழக்கிழமை எழுப்பியது. ‘மகாராஷ்டிரம் போன்ற முன்னேறிய ஒரு மாநிலத்தில் நடந்துள்ள இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது; பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் விநியோக இயந்திரங்கள் மற்றும் போதிய தண்ணீா் வசதியை உறுதி செய்ய வேண்டும்’ என்று அக்கட்சி வலியுறுத்தியது.
காங்கிரஸுக்கு பதிலளித்துப் பேசிய மாநில அமைச்சா் கிரிஷ் மகாஜன், ‘சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறிழைத்தோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தாா்.