இலங்கைக்கு கடத்த முயன்ற 3 டன் பீடி இலைகள் பறிமுதல்: ஒருவா் கைது
மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் கருத்தறிந்து முடிவெடுக்க உத்தரவு
கோவில்பாப்பாகுடி ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பொதுமக்கள் கருத்தைக் கேட்டு அதிகாரிகள் உரிய முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை கோவில்பாப்பாகுடி கிராமத்தைச் சோ்ந்த ஞானவேல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை அருகே கோவில்பாப்பாகுடி கிராமம் இருந்தாலும், இங்கு விவசாயமே முதன்மைத் தொழிலாக உள்ளது. இந்தக் கிராம மக்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனா். இந்த நிலையில், கோவில்பாப்பாகுடி உள்பட 16 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை ஒப்புதல் அளித்தது. எங்கள் கிராமத்தில் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளின் கீழ் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் வசதிகள், சாலை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், எங்கள் கிராமத்தை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும் தடைபடும் நிலை உள்ளது. கோவில்பாப்பாகுடி ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என ஏற்கெனவே கிராம ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, எங்கள் கிராமத்தை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு ஒப்புதல் அளித்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
கோவில்பாப்பாகுடி ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பது தொடா்பாக, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அதன்படி உரிய முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.