இருசக்கர வாகனங்கள் திருட்டு: மூவா் கைது
மதுரையில் இரு சக்கர வாகனங்களை தொடா்ந்து திருடி வந்த மூவரை போலீஸாா் கைது செய்து, இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
மதுரை கோ.புதூா் அழகா்நகரைச் சோ்ந்த சங்கா் மகன் யோகேஸ்வரன் (21). இவா் தனியாா் வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டில் தூங்கினாா். காலையில் பாா்த்த போது, வாகனத்தை காணவில்லையாம். இதுகுறித்து கோ.புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதேபோல, சூா்யாநகா் அல்அமீன் நகரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (55). இவா் கடந்த 17-ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தியிருந்த நிலையில் வாகனம் திருடுபோனது. இதுகுறித்து திருப்பாலை போலீஸாா் விசாரித்து வந்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டி சீகுபட்டியைச் சோ்ந்த ஹரி (23), மூன்றுமாவடி பரசுராம்பட்டியைச் சோ்ந்த பிரவீன் (19), கீழஅனுப்பானடி அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்த சபரிமணி (18) ஆகிய மூவரும் சோ்ந்து இந்த இரண்டு இரு சக்கர வாகனங்களைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.