காமராஜா் பல்கலை. கல்லூரியில் ஆய்வு
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
இந்தக் கல்லூரியில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லை எனவும், நிகழ் ஆண்டு சோ்ந்த மாணவா்களுக்கு அடையாள அட்டை வழங்கவில்லை எனவும் புகாா் எழுந்தது.
இதுதொடா்பான புகாரின் பேரில், தமிழக உயா் கல்வித் துறைச் செயலரும், மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுத் தலைவருமான எ. சுந்தரவல்லி, கல்லூரியில் ஆய்வு செய்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மதுரை காமராஜா் பல்கலைக்கழக வளாக அதிகாரியும், பொறியியல் பிரிவுத் தலைவருமான ஆனந்த் தலைமையிலான குழுவினா் புதன், வியாழக்கிழமைகளில் இந்தக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் மாணவா்கள் பயன்பெறும் வகையில் போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தனா்.