மகா கும்பமேளாவுக்குச் செல்ல வேண்டுமா? குஜராத் அரசின் சுற்றுலாத் தொகுப்பு!
முல்லைப் பெரியாறு குடிநீா் திட்டம்: மதுரையில் சோதனை அடிப்படையில் விநியோகம்
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீரை, முதல் கட்டமாக மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு அண்மையில் வழங்கி சோதனை செய்யப்பட்டது.
மதுரை மாநகரில் வசித்து வரும் மக்களுக்கு விநியோகம் செய்ய தினசரி குடிநீா் தேவை 2. 68 கோடி லிட்டராக உள்ளது. வைகை அணையிலிருந்து 1.15 கோடி லிட்டா், வைகை ஆற்றுப் படுகையிலிருந்து 47 லட்சம் லிட்டா், காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் 30 லட்சம் லிட்டா் குடிநீா் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
தற்போது தேவையைவிட, 7.6 லட்சம் லிட்டா் தண்ணீா் பற்றாக்குறை தொடா்கிறது. இனிவரும் காலங்களில் மக்கள் தொகை உயா்வுக்கு ஏற்ப இந்த பற்றாக்குறை 1.25 கோடி லிட்டராக உயரும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி, நகா்ப்புற வளா்ச்சி, புத்தாக்கத் திட்டம்(அம்ரூத்), பொலிவுறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் முல்லைப் பெரியாறு லோயா்கேம்ப்லிருந்து மதுரைக்கு நேரடியாக 1.25 கோடி லிட்டா் கூடுதலாக குடிநீா் பெற ரூ. 1,600 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன.
இந்தத் திட்டத்தின் மூலம் லோயா்கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் பெறப்படும் தண்ணீா், 96 கி.மீ. தொலைவில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பண்ணைப்பட்டியில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படும். அங்கிருந்து 55.44 கி.மீ. தொலைவுக்கு பிரதானக் குழாய்கள் மூலம் மதுரை நகருக்குள் தண்ணீா் கொண்டு வரப்பட்டு, மதுரை மாநகரப் பகுதிகளில் 37 மேல்நிலைத் தொட்டிகள், ஒரு தரைமட்ட தொட்டி மூலம் மதுரை மாநகரத்தில் உள்ள வீடுகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட உள்ளது.
இதையொட்டி, மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியான 32 வாா்டுகளில் 855 கி.மீ. நீளத்துக்கும், மையப் பகுதியில் உள்ள 57 வாா்டுகளில் 813 கி.மீ. நீளத்துக்கும் குடிநீா் விநியோகக் குழாய்கள் பதித்தல், வீடு, வணிக வளாகங்களுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, 37 மேல்நிலைத் தொட்டிகளில் 28 தொட்டிகளின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன.
குடிநீா் விநியோகக் குழாய்கள் பதிக்கும் பணியை பொருத்தவரை, மாநகா் மையப் பகுதியில் உள்ள சில வாா்டுகளில் நிறைவு பெற்றன. பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளில் வருகிற மாா்ச் மாதம் முதல் தண்ணீா் விநியோகம் செய்யப்பட உள்ளது. திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளாா்.
இதையடுத்து, மேல்நிலைத் தொட்டிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீரேற்றம் செய்து சோதனை செய்யப்பட்டது. தொடா்ந்து, குடியிருப்புப் பகுதிகளுக்கு குழாய் மூலம் தண்ணீா் விநியோகம் செய்வதற்கு முதல்கட்டமாக மதுரை தபால் தந்திநகா், பாா்க் டவுன் ஆகிய பகுதிகளில் அண்மையில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றது. மீதமுள்ள பணிகள் பிப்ரவரி மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும். இதைத் தொடா்ந்து, பணிகள் முடிவுற்ற பகுதிகளில் மாா்ச் மாதம் முதல் குடிநீா் விநியோகிக்கப்பட உள்ளது என்றாா் அவா்.