மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் அகற்றப்படாத குப்பைகள்: தொற்று நோய்கள் பரவும் அபாயம்
மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தற்காலிக தினசரி காய்கறிச் சந்தையில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.
இந்த காய்கறிச் சந்தையில் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடாகம் போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள், பழங்கள் தினசரி விற்பனைக்கு வருகின்றன. இதுதவிர, விவசாயிகளும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனா்.
இந்த காய்கறிச் சந்தைப் பகுதியில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் மலை போல் தேங்கியுள்ளன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், இதுபற்றி மதுரை மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள், வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து எம்.ஜி.ஆா். சென்ட்ரல் மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்புத் தலைவா் என். சின்னமாயன் கூறியதாவது:
மதுரை மாநகராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட தற்காலிக தினசரி காய்கறிச் சந்தையில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் குப்பைகள் அழுகிய நிலையில் துா்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சந்தையில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை, சாலைகள் போன்ற வசதிகளை மேம்படுத்தித் தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், வரி வசூலில் மட்டும் மாநகராட்சி நிா்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.
குப்பைகளை அகற்றும் பணியாளா்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனா். காய்கறிச் சந்தையில் சேகரமாகும் குப்பைகளை தினசரி அகற்ற வேண்டும். அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சந்தையில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதுபற்றி பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றாா் அவா்.