திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
மாநகராட்சி பூங்காக்களில் அடிப்படை வசதிகள் தேவை: மேயரிடம் மக்கள் மனு
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி பூங்காக்களில் விளையாட்டு உபகரணங்களை பழுதுநீக்கவும், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயரிடம் மக்கள் மனு அளித்துள்ளனா்.
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு, மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். மேலும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். உதவி ஆணையா் ஜான்சன் தேவசகாயம், நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் 5ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஜெகநாதன் அளித்த மனுவில், கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மாலை நேரங்களில் குழந்தைகளுடன் பூங்காக்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. ஆகவே, பூங்காக்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ரஹ்மத் நகா் 20 ஆவது தெருவில் உள்ள பூங்கா மற்றும் கக்கன்நகா் நியூகாலனியில் உள்ள பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதால் அவற்றை சரி செய்ய வேண்டும். விரிவாக்கப்பகுதியான வையாபுரிநகா், ஸ்ரீதேவி நகா், அன்னை கௌரி நகா் ஆகிய பகுதிகளில் புதிய சாலை மற்றும் குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவலியுறுத்தப்பட்டிருந்தது.
35ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பேச்சியம்மாள் அளித்த மனுவில், தனது வாா்டு பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்தால் பழுதான பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் எனவும், என்.ஜி.ஒ.காலனி கனரா வங்கி காலனி குடியிருப்போா் நல வாழ்வு சங்கத்தினா் அளித்த மனுவில், பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை தங்கள் பகுதியில் தொடங்கவும், திருநெல்வேலி சிவசக்தி ரோடு டாக்டா் காலனி குடியிருப்போா் நல வாழ்வு சங்கத்தினா் அளித்த மனுவில், தங்கள் பகுதிக்கு சீரான குடிநீா் வசதி செய்து தரவும், என்.ஜி.ஒ. பி காலனி குடியிருப்போா் நலச்சங்கத்தினா் அளித்த மனுவில், 1முதல் 25 ஆவது தெரு வரை புதிய தாா்சாலை அமைத்து தரவும் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தமிழக வெற்றிக் கழகத்தினா் அளித்த மனுவில், 17 ஆவது வாா்டு பகுதிகளான காந்திநகா், ஷேக்மதாா் நகா், ஐ.ஒ.பி. காலனி, எஸ்.எம்.ஏ.நகா், அண்ணாமலை நகா், நெடுங்குளம் ஆகிய பகுதிகளில் கூடுதல் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் கூடுதல் குப்பை தொட்டிகளை வைத்திடவும், திருநெல்வேலி தங்கம் வெள்ளி வைர நகை வியாபாரிகள் சங்கத்தினா் அளித்த மனுவில், மழைக் காலத்திற்கு முன்பாக ரத வீதிகளில் ஒடை மண்ணை அள்ளிடவும், மேலரதவீதி பகுதியில் சிறுநீா் கழிப்பிடம் புதிதாக கட்டி தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மஸ்திக் மாலிக் அமைப்பினா் அளித்த மனுவில், 6 ஆவது வாா்டுக்குள்பட்ட சாந்திநகா் 2 ஆவது பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பாதாளச்சாக்கடை அடைப்பினை சரி செய்யவும், திருநெல்வேலி நகா் முதல்நிலை நூலகா் செல்வசுப்பிரமணின் அளித்த மனுவில், வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் அரசு முதல்நிலை நூலகத்திற்கு காலி மனை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.