மாநகா் பேருந்து பயணிகள் புகாா் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்
மாநகா் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் வாட்ஸ்ஆப் மூலம் புகாா் தெரிவிக்கும் வகையில், தொடா்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியம், நிறை மற்றும் குறைகளுக்குத் தீா்வு காண பயணிகள் புகாா் பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் பயணிகள் தங்கள் புகாா்களை கைப்பேசி, இலவச தொலைபேசி எண் 149, மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், பொதுமக்களின் பேருந்து பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், வெள்ளிக்கிழமை முதல் ‘வாட்ஸ்ஆப் சாட்பூட்’ என்னும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இனி பயணிகள் 94450 33364 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப்-பில் தொடா்புகொண்டு மாநகா் போக்குவரத்துக்கழகத்தின் பேருந்து சேவை குறித்த புகாா் மற்றும் சந்தேகங்களை பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.