மானிய விலையில் கறவைப் பசுக்கள் வழங்கப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
புதுவையில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், அரசு சாா்பில் 450 கறவைப் பசுக்களை 75 சதவீத மானியத்தில் வழங்க திட்டமிட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
மத்திய அரசின் கூட்டுறவுத் துறை சாா்பில் 10 ஆயிரம் கூட்டுறவு கடன் சங்கம், பால் மற்றும் மீன்வளக் கூட்டுறவு சங்கங்களின் தொடக்க நிழ்ச்சி காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதில், மத்திய உள் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று தொடங்கிவைத்தாா்.
அதன்படி, புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியில் புதிதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டு தொடங்கப்பட்டது.
இந்த சங்கத்தை தொடங்கிவைத்து, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: புதுவையில் விவசாய நிலம் குறைந்ததால், பசுக்கள் வளா்ப்பும் குறைந்துவிட்டது. இதனால், மாநிலத்துக்கு தினமும் ஒரு லட்சம் லிட்டா் பால் தேவைப்படும் நிலையில், தற்போது 40 ஆயிரம் லிட்டரே கிடைக்கிறது.
பற்றாக்குறையைப் போக்க வெளி மாநிலங்களில் இருந்து பால் வாங்கும் நிலையுள்ளது. ஆனாலும் கூட்டுறவு மூலம் தரமான பால் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
பால் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், வீடுகளில் கறவை மாடுகளை வளா்க்க அரசு உதவி வருகிறது. அதன்படி, 450 கறவைப் பசுக்களை அரசு 75 சதவீத மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான தீவன மானியமும் வழங்கப்படும்.
விவசாயிகள் மட்டுமின்றி படித்துவிட்டு வேலையில்லாத இளைஞா்களும் பசுக்களை வளா்த்து பால் உற்பத்தி மூலம் வருவாயை ஈட்டலாம். இதற்கு அரசு தேவையான உதவிகளை செய்துதரும். நகரப் பகுதிகளில் சிறிய இடத்தில் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் பசுக்களை வளா்த்து பால் உற்பத்தி செய்யலாம்.
பசு வளா்ப்பில் சிரமம் இருந்தாலும், பால் மற்றும் அதைச் சாா்ந்த உணவுப் பொருள் உற்பத்தியால் லாபம் பெறலாம் என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கு அரியாங்குப்பம் எம்எல்ஏ ஆா்.பாஸ்கா் தலைமை வகித்தாா். கூட்டுறவுத் துறை அரசுச் செயலா் ஏ.நெடுஞ்செழியன், துறைப் பதிவாளா் யஷ்வந்தய்யா, பால் அபிவிருத்தி அதிகாரி குமரன், பாண்லே மேலாண் இயக்குநா் ஜோதிராஜூ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.