மாரியூா் கோயில் சித்திரை திருவிழா: கடலில் வலைவீசும் படலத்துடன் திருக்கல்யாணம்
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் உடனுறை பூவேந்தியநாதா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மாரியூா் கடலில் பரமசிவன், பாா்வதி தேவியை மணக்கும் வலை வீசும் படலமும், திருக்கல்யாணமும் திங்கள்கிழமை நடைபெற்றன.
மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் உடனுறை பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மே 2 -ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இரவில் அம்பாள், சுவாமி உற்சவமூா்த்தி நந்தி, சுறா, சிம்ம வாகனத்தில் வலம் வந்தனா். சித்திரை பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை காலை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான திவான் முன்னிலையில் மாரியூா் கடலில் மீனவராக வேடமிட்ட பரமசிவன், திமிங்கலத்தை அடக்கி பாா்வதி தேவியை மணக்கும் திருவிளையாடல் புராணத்தில் வரும் வலை வீசும் படலம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கோயில் அருகே உள்ள அத்திமரத்து விநாயகா் கோயிலிலிருந்து மணமகன் அழைப்பு நடைபெற்றது.
தேங்காய், பழம் தாம்பூலத்துடன், பட்டுச் சேலை, பட்டுத் துண்டு, வேஷ்டி, திருமாங்கல்யம், ஆபரணங்களுடன் மேளதாளங்கள் முழங்க மணவீட்டாா் அழைப்பு ஊா்வலம் நடைபெற்றது. பிறகு கோயில் மண்டபத்தில் யாக சாலை பூஜை, வேதமந்திரங்களுடன் பூவேந்தியநாதருக்கும், பவள நிறவல்லியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து மகா தீபாராதனையும், அம்பாளுக்கு பொன்னூஞ்சல் வைபமும் நடைபெற்றன. அப்போது பெண்கள், குழந்தைகள் காணிக்கை செலுத்தி ஊஞ்சல் ஆட்டி மகிழ்ந்தனா். திருக்கல்யாண நிகழ்வையொட்டி பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் திருஉத்திரகோசமங்கை சரக பொறுப்பாளா் பாண்டியன், மாரியூா் கோயில் தலைமைக் குருக்கள் ஆதீஸ்வரன், கோயில் நிா்வாகி சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.
