மாற்றுச் சமூக இளைஞரை விரும்பிய தங்கை; காதலனை நேரில் வரவழைத்து படுகொலை செய்த அண்ணன்!
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் சிம்சன் என்ற புஷ்பராஜ். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது தங்கை சரோஜினி. பொறியியல் பட்டதாரியான இவர், நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. விஜயகுமார் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள சிமெண்ட் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர்களின் நட்பு காதலாக மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இருவரின் காதல் விவகாரம் சரோஜினியின் வீட்டிற்கு தெரியவரவே அவரை வேலைக்கு அனுப்பவில்லை. சரோஜினியிடம் விஜயகுமாருடனான காதலை கைவிடுமாறு அவரின் பெற்றோரும், சகோதரரும் வலியுறுத்தியும் அவர் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரோஜினி வீட்டை விட்டு வெளியேறி விஜயகுமாரின் வீட்டில் தஞ்சம் அடைந்தார். இதனையடுத்து சரோஜினியின் பெற்றோர் பாளையங்கோடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் தன் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். போலீஸார் இரண்டு வீட்டாரையும் அழைத்து சுமுக தீர்வு காண வேண்டும் எனக் கூறி சரோஜினியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து விஜயகுமாருடனான காதலை கைவிடுமாறு வற்புறுத்தியதால் கடந்த சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த சரோஜினியின் அண்ணன் சிம்சன், விஜயகுமாரை தொடர்பு கொண்டு பேசி காதல் விவகாரம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறி நேரில் வருமாறு அழைத்துள்ளார். இதனால் விஜயகுமார் நண்பர் ஒருவருடன் நெல்லைக்கு வந்தார். அவரை அழைத்து வர சிம்சனும் அவரது நண்பரான சிவா என்பவரையும் பைக்கில் அழைத்துக் கொண்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சென்றனர்.
விஜயகுமார் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் அதனால் ரயில் நிலையத்திலேயே காத்திருங்கள் எனக்கூறி விஜயகுமாரின் நண்பரை அங்கேயே காத்திருக்குமாறு கூறியுள்ளனர். விஜயகுமார் மட்டும் அவர்களுடன் பைக்கில் சென்றுள்ளார். தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மாடியில் வைத்து காதல் விவகாரம் தொடர்பாக பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படாததால் விஜயகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் விஜயகுமார் உயிரிழந்தார். திருமண ஆசையில் காதலியை பார்க்க வந்தவரை காதலியின் அண்ணன் கொலைசெய்த சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.