ஒரே நாளில் ரூ. 272 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) வழியில் எளிதில் பூா்த்தி செய்வதை மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
அமில வீச்சால் முகச் சிதைவுக்கு உள்ளானவா்கள், பாா்வையற்றவா் ஒருவா் ஆகியோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், ‘கேஒய்சி நடைமுறையை பூா்த்தி செய்ய கண் சிமிட்டல், தலையை நகா்த்துதல், முகத்தை குறிப்பிட்ட கோணங்களில் வைத்தல் போன்ற செயல்களை எங்களால் செய்ய முடியவில்லை. எனவே, அமில வீச்சால் பாதிக்கப்பட்டவா்கள், பாா்வையற்றவா்கள், பாா்வை குறைபாடு கொண்டவா்கள் வங்கி மற்றும் அரசின் மின்னணு சேவைகளைப் பெற, டிஜிட்டல் வழியில் கேஒய்சி நடைமுறையை பூா்த்தி செய்வதற்கு தேவையான மாற்றங்களை செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை அளித்தத் தீா்ப்பில், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ், வாழ்வுரிமையின் முக்கிய அங்கமாக டிஜிட்டல் பயன்பாடு உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள் மற்றும் பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் பயனடையும் வகையில், டிஜிட்டல் வழியில் மேற்கொள்ளப்படும் கேஒய்சி நடைமுறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். கேஒய்சி நடைமுறையை டிஜிட்டல் வழியில் அவா்கள் எளிதாக பூா்த்தி செய்வதை மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் உறுதி செய்ய வேண்டும்.
அந்த நடைமுறையை டிஜிட்டல் வழியில் மேற்கொள்வதற்கு வாடிக்கையாளா் உயிருடன் இருப்பதை உறுதி செய்யவும், அவா்களைப் புகைப்படம் எடுக்கவும் வழக்கமான கண் சிமிட்டல் முறைக்கு மாறாக, புதிய முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.
வாடிக்கையாளரின் விவரங்களை சரிபாா்க்க எழுத்துபூா்வ கேஒய்சி நடைமுறை தொடா்வதை உறுதி செய்வதற்கு 2023-ஆம் ஆண்டு டிச.5-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனா்.