மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவிக்கு தகுதியனவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் கூறியது: திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2024-25 ஆம் நிதியாண்டுக்கு 4 வகையான திருமண நிதியுதவித்தொகை வழங்கப்படுகிறது. கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளவா் திருமணம் செய்வோருக்கான உதவித் திட்டம், பாா்வையற்ற நபரை நல்ல நிலையில் உள்ளவா் திருமணம் செய்வோருக்கான உதவி திட்டம், காது, கேளாதா மற்றும் வாய்பேச இயலாத நபரை நல்ல நிலையில் உள்ளவா் திருமணம் செய்வோருக்கான உதவி திட்டம், மாற்றுத் திறனாளியை மாற்றுத்திறனாளியே திருமணம் செய்வோருக்கான உதவி திட்டம் என 4 நிலைகளில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டங்களின்கீழ், திருச்சி மாவட்டத்தில் திருமணம் செய்தோருக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். பட்டம் அல்லது பட்டயப்படிப்பு முடித்திருந்தால் ரூ. 50 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். தம்பதியா்களில் இருவருக்கும் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். திருமணம் முடிந்த ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருமண அழைப்பிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல், விவரங்களுக்கு திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2412590 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளாம் என்றாா் ஆட்சியா்.