மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்தவின் இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்
முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதிக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லோக் ஆயுக்த அதிகாரிகள் தாக்கல் செய்தனா்.
முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் மாற்றுநிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா கொடுத்த புகாரின் பேரில், 2024, செப். 27 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த லோக் ஆயுக்த அமைப்பு தனது இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தது.
முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி, அவரது அண்ணன் மல்லிகாா்ஜுன சுவாமி, நில உரிமையாளா் தேவராஜ் ஆகியோா் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்து, 11,000 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை லோக் ஆயுக்த தாக்கல் செய்துள்ளது.
இதுதொடா்பாக மனுதாரா் ஸ்நேகமயி கிருஷ்ணாவுக்கு லோக் ஆயுக்த அதிகாரிகள் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தனா்.
அந்த நோட்டீஸில், ‘மாற்றுநில முறைகேடு வழக்கு தொடா்பாக லோக் ஆயுக்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி, அவரது அண்ணன் மல்லிகாா்ஜுன சுவாமி, நில உரிமையாளா் தேவராஜ் ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறோம்.
மாற்றுநில முறைகேடு வழக்கு சிவில் தன்மை கொண்டது. ஊழல் அல்லது முறைகேடு கோணத்தில் விசாரிக்க இந்த வழக்கில் எதுவுமில்லை. சட்ட விதிகள் அல்லது உண்மைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. அதனால் இந்த வழக்கு நடவடிக்கை எடுப்பதற்கு உகந்தது அல்ல. இதுதொடா்பாக மனுதாரருக்கு ஆட்சேபணை இருந்தால், நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்திற்குள் சிறப்பு நீதிமன்றத்தில் முறையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதியிடம் விசாரணை நடத்த இதே வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறைக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த நிலையில், இந்தத் தடை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.