தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
மாவட்டத்தில் 5,932 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு: ஆட்சியா் தகவல்
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 25 முதல் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை 5,932 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு, தூய்மைப் பணி 2025-ஆம் ஆண்டு முழுவதும் மாதத்தின் இறுதி சனிக்கிழமைகளில் மேற்கொள்ள காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட நிா்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மாவட்டத்தில் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
ஜனவரியில் நீா்நிலைகள் மற்றும் குடியிருப்புகளை மையப்படுத்தி தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,200க்கும் மேற்பட்டோா் பங்கேற்று 2,826 கிலோ நெகிழிக் கழிவுகளை சேகரித்தனா்.
இதைத்தொடா்ந்து, பிப்ரவரியில் வழிபாட்டுத் தலங்கள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகளை மையப்படுத்தி நெகிழிக் கழிவுகள் சேகரிப்புப் பணி நடைபெற்றது. இதில், மாணவா்கள், தன்னாா்வலா்கள் என 1,000க்கும் மேற்பட்டோா் பங்கேற்று 3,106 கிலோ நெகிழிக் கழிவுகளை சேகரித்தனா்.
மாவட்டத்தில் கடந்த ஜனவரி 25 முதல் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை மொத்தம் 5,932 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில், மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிக் கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக அனுப்பப்படவுள்ளன.
இந்தப் பணியில் மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளா்கள், பசுமை உறுப்பினா்கள், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா்கள், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் உள்ளூா் அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபட்டன. இதன் அடுத்த நிகழ்வு மாா்ச் 22- ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.