அமராவதி சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை
உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உடுமலை கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் விவசாயிகள் பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுளாக மூடிக்கிடக்கும் அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை நடப்பு ஆண்டாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மடத்துக்குளம் வட்டம், வேடபட்டியில் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்பட்டு வந்த அமராவதி நாற்றுப்பண்ணை கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள பழைமையான மரங்களை பலா் முறைகேடாக வெட்டி வருகின்றனா். இதைத் தடுத்து நிறுத்தி அந்த நிலத்தை அரசே பராமரிக்க வேண்டும்.
உடுமலை மின்வாரிய அலுவலகத்தில் விவசாய மின் இணைப்புக்கு பணம் செலுத்தி ஓராண்டுக்கு மேலாகியும் மின் இணைப்புத் தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். எனவே, பணம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.
பாலப்பம்பட்டியில் உள்ள கூட்டுறவு சங்கத்தை மைவாடி, பெரியகோட்டை மற்றும் கண்ணமநாயக்கனூா் பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகிறாா்கள். அதிகமான விவசாயிகள் பயன்படுத்தும் இந்த கூட்டுறவு சங்கத்தில் நிலையான செயலாளா் இல்லாததால் பயிா்க் கடன் மற்றும் உரங்களை விவசாயிகள் உரிய நேரத்தில் பெற முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, இங்கு நிரந்த செயலாளா் நியமிக்க வேண்டும்.
வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்க வேண்டும். நகரையொட்டியுள்ள கணக்கம்பாளையம், போடிபட்டி ஊராட்சிகளை உடுமலை நகாரட்சியுடன் இணைக்க வேண்டும் என்றனா்.