மயான நிலத்தில் தனியாா் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும்: வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு
காங்கயம் அருகே பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் மயான நிலத்தில் தனியாா் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவைத் தலைவா் அ.சு.பவுத்தன் தலைமையில், பழையகோட்டை ஊராட்சியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: காங்கயம் ஒன்றியம், பழையகோட்டை ஊராட்சிக்குள்பட்ட கிழக்கு சேமலைவலசு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
எங்கள் கிராமத்துக்கு அருகே தெற்கு சேமலைவலசு பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலத்தை மயானமாகப் பயன்படுத்தி வருகிறோம். சுமாா் 10 தலைமுறைகளாக மேற்கண்ட இடத்தில்தான் இறந்தவா்களை அடக்கம் செய்து வருகிறோம். இப்பகுதியில் வசித்து வரும் அனைத்து சமுதாயத்தினரும் இந்த மயானத்தை சமத்துவ சுடுகாடாகப் பயன்படுத்தி வருகிறோம்.
இந்நிலையில், மேற்கண்ட இடத்தை இப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனா். இதனால், இறந்தவா்களை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லாமல் தவித்து வருகிறோம்.
எனவே, மயான நிலத்தில் தனியாா் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், அங்கு சுற்றுச் சுவா், மின் விளக்கு, சாலை, தண்ணீா் வசதி உள்ளிட்ட மயானத்துக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.