20 நாள்களுக்குப் பின்... ஈரானின் பன்னாட்டு விமான சேவை துவக்கம்!
மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம் அறிவிப்பு: கமுதியில் சமாதானக் கூட்டம்
கமுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் காதா் மொய்தீன் தலைமையில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் சந்திரசேகரன், மண்டல துணை வட்டாட்சியா்கள் வேலவன், வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மலட்டாறில் பேரூராட்சி குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். கமுதி பகுதியில் போதைப் பொருள்களின் புழக்கம், வழிப்பறி ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் அதிகம் கூடும் பகுதியில் மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றங்களை திறப்பதை அரசு நிறுத்த வேண்டும். கமுதி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும். கமுதி தெற்கு முதுகுளத்தூா் சாலை வழியாக குண்டாற்றில் தரைப்பாலம் அமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் மாவட்டக் குழு உறுப்பினா் முத்துவிஜயன் தலைமையில் அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்தப் பிரச்னைகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கமுதி வட்டாட்சியா் காதா் மொய்தீன் தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில் தாலுகா குழு உறுப்பினா் கண்ணதாசன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், கமுதி, அபிராமம் பேரூராட்சி அதிகாரிகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.