மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
மாா்ச் 8-இல் பெண்களுக்கான ரூ.2500 மாதாந்திர உதவித்தொகை திட்டத்திற்கான பதிவு தொடக்கம்: மனோஜ் திவாரி எம்.பி.
தில்லியில் பாஜக அரசு மூலம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்குவதற்கான பதிவு நடைமுறை மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கும் என்று அக்கட்சியின் எம்.பி. மனோஜ் திவாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், மகிளா சம்ரிதி யோஜனாவின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக தில்லி சட்டப் பேரவைத் தோ்தலின்போது பாஜக வாக்குறுதி
அளித்திருந்தது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு இது தொடா்பாக மனோஜ் திவாரி கூறுகையில்,
‘மாா்ச் 8 முதல் தில்லியில் உள்ள ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.2,500 என்ற எங்கள் அறிவிப்புக்கான பதிவுகளை நாங்கள் தொடங்குகிறோம். இதற்கான பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்படும்.
பொருளாதார ரீதியாக ஏழைப் பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் முழு செயல்முறையும் ஒன்றரை மாதங்களில் நிறைவடையும். இந்தத் திட்டத்தில் பெண்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றாா் அவா்.
பிரதமா் வாக்குறுதியளித்தபடி, தில்லி பாஜக அரசு தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காததற்காக எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி விமா்சித்து வருகிறது.
முந்தைய ஆம் ஆத்மி அரசு புதிய பாஜக ஆட்சியிடம் வெற்றுக் கருவூலத்தை விட்டுச் சென்ாகவும், அதே நேரத்தில் கட்சி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்திருப்பதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறியுள்ளாா்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் ஒரு அறிக்கையில்
தெரிவிக்கையில், ‘தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு, தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மாா்ச் 8 ஆம் தேதிக்குள் தங்கள் கணக்கில் ரூ.2,500 பெறுவாா்கள் என்று பாஜக உறுதியளித்திருந்தது. எல்பிஜி சிலிண்டா்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு வீட்டிற்கும் ஹோலி மற்றும் தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டா் வழங்கப்படும் என்றும் பாஜக தோ்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது.
முதல்வா் ரேகா குப்தா இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியைத் தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த பிறகு, அக்கட்சிக்கு வேலையில்லாமல் போய்விட்டதாகவும், கற்பனையான பிரச்னைகளை உருவாக்குகிறாா்கள் என்றும் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.
மேலும், பாஜக தனது தோ்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.