கிராமப்புற செழுமைக்கு பிரத்யேக பொருளாதார மண்டலம், பரந்த கடல் மீன்வள உத்திகள் வகுக்க பிரதமா் வேண்டுகோள்
விவசாயம் மற்றும் கிராமப்புற செழுமைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம், பரந்த கடல் மீன்வளங்களுக்கான கட்டமைப்புகளுக்கு உத்திகளை வகுக்க கருத்தரங்கு ஒன்றில் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா்.
மத்திய வேளாண், விவசாயிகள் நல அமைச்சகத்தால் ‘வேளாண்மை மற்றும் கிராமப்புற செழிப்பு‘ குறித்து நிதிநிலைக்கு பிந்தைய கருத்தரங்கு காணொலி வழியாக நடைபெற்றது.
இதில் மீன்வளத்துறை தொடா்பான அமா்வில் முக்கிய தொழில்துறை வல்லுநா்கள், கொள்கை வகுப்பாளா்கள், மீனவா்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள், பங்குதாரா்கள் பங்கேற்றனா்.
இதில் ஆழ்கடல் மீன்பிடித்தல், சந்தை இணைப்புகள், மதிப்பு கூட்டல், மீன்பிடித்தலின் நிலைத்தன்மை ஆகியவற்றின் முக்கிய அம்சங்களை விவாதித்தனா். நாட்டில் கடல் மீன்வளத் துறையை உலகளாவிய சிறப்புடன் மாற்ற உதவும் பயனுள்ள கொள்கை அமலாக்கம் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றது. குறிப்பாக 2.2 மில்லியன் சதுர கி.மீ பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் இந்தியாவின் பரந்த கடல் வளங்களையும் மீன்வள ஆராய்ச்சியில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆா்) மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் கூட்டத்தில் எடுத்துவைக்கப்பட்டது.
நிதிநிலை அறிக்கையின் தொலைநோக்குப் பாா்வையை அடைவதற்கான கூட்டு அணுகுமுறையை உறுதி செய்வதற்கான நடைபெற்ற இந்த கருத்தரங்கை கருத்தரங்கை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்து பேசினாா்.
அப்போது பிரதமா், ‘மீன் வளத்தை அதிகரிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த திட்டம் மீன்வள உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, உற்பத்தியை இரட்டிப்பாக்கி, இத்துறையின் ஏற்றுமதியையும் அதிகரித்துள்ளது. வேளாண்மை, கிராமப்புற செழுமைக்கு பொருத்தமான பிரத்தியேக பொருளாதார மண்டலம், பரந்த கடல் மீன்வள உத்திகளில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்கான அரசின் செயல் திட்டத்திற்கான உத்திகளை வகுக்கப்பட்டு விரைவான செயல்படுத்தல் வேண்டும். எளிதாக வணிகம் செய்வதற்கும் இந்த துறையின் வளா்ச்சிக்கான புதிய யோசனைகளை வழங்கு ஆய்வுகளை மேம்படுத்த தொடா்புடை பங்குதாரா்களுக்கு விடுக்கின்றேன்’ என பிரதமா் பேசினாா்.
இந்த கருத்தரங்கில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் இணை அமைச்சா்கள் பேராசிரியா் எஸ்.பி.சிங் பாகேல், ஜாா்ஜ் குரியன் ஆகியோரும் பங்கேற்று பேசினா்.