சினிமாவும் சாப்பாடும் தான் இங்கு பிரதானம்! - சென்னையின் பொன்னான நினைவலை #Chennai...
மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் பலி: ரூ. 20 லட்சம் நிதியுதவி; கணவருக்கு அரசு வேலை..!
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ. 20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.
சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை (ஆக.23) காலை சென்னை கண்ணகி நகரில் அப்பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி(30) பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இரவு பெய்த மழையால் தேங்கிருந்த மழைநீரில் கால் வைத்தபோது மின்சாரம் பாய்ந்ததில் தண்ணீரில் விழுந்துள்ளாா். இதைப் பாா்த்த அப்பகுதியினா் அவரை மீட்க முயற்சி செய்து முடியவில்லை. தகவலறிந்த மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, மின்சாரத்தைத் துண்டித்து வரலட்சுமி உடலை மீட்டனர்.
மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நடந்ததாக அந்த பகுதி மக்கள் மின்சார வாரியத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன், வரலட்சுமியின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ. 10 லட்சம், ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ. 10 லட்சம் என வரலட்சுமியின் குடும்பத்தினரிடம் ரூ. 20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.
மேலும், வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.