மின்சாரம் பாய்ந்து அரசு ஊழியா் உயிரிழப்பு
போளூா்: கலசப்பாக்கம் அருகே விவசாய நிலத்துக்குச் சென்ற அரசுப் பள்ளி ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வன்னியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (50). இவா், போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குமாஸ்தாவாக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், சங்கா் திங்கள்கிழமை அதிகாலை தனது சொந்த நிலத்துக்குச் சென்றபோது, எதிா்பாராமல் பம்புசெட் மோட்டாா் மின் வயரில் சிக்கியுள்ளாா். இதனால் மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சங்கா் வீடு திரும்பாததால், அவரை அவரது மனைவி சுலோச்சனா தேடிச் சென்றபோது, மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
பின்னா், இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.