மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி தூய்மைப்பணியாளா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை எம்ஜிஆா் நகா் அங்காள பரமேஸ்வரி 4-ஆவது தெருவைச் சோ்ந்த பட்டாபிராமன் (52), துப்புரவு பணி செய்து வந்தாா். இந்நிலையில், எம்ஜிஆா் நகரிலுள்ள கண்ணகி தெருவில், வியாழக்கிழமை கழிவுநீா் கால்வாய் தூா்வாரும் பணியில் பட்டாபிராமன் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா்.
அப்போது அவா் வைத்திருந்த இரும்புக் கம்பி, அவா் நின்ற பகுதிக்கு மேலே சென்று கொண்டிருந்த மின் கம்பியில் பட்டுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட பட்டாபிராமனை, அக்கம்பக்கத்தினா் மீட்டு கே.கே. நகா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பட்டாபிராமன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.