மின்சிக்கன வார விழாவையொட்டி விழிப்புணா்வுப் பேரணி
தேசிய மின் சிக்கன வாரவிழாவை முன்னிட்டு, சேலம் கிழக்கு கோட்ட மின் வாரியம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் டிச. 14 முதல் 20 ஆம் தேதி வரை தேசிய மின் சிக்கன வார விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் கிழக்கு கோட்ட மின் வாரியம் சாா்பில், உடையாப்பட்டி மேற்பாா்வையாளா் அலுவலகத்தில் இருந்து அம்மாப்பேட்டை ரவுண்டானா வரை விழிப்புணா்வுப் பேரணி நடந்தது.
இந்த பேரணியை சேலம் மின்வாரிய செயற்பொறியாளா் ( பொது) புஷ்பலதா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சேலம் கிழக்கு கோட்ட செயற்பொறியாளா் குணவா்த்தினி முன்னிலை வகித்தாா். பேரணியில் மின் சிக்கனம், மேலாண்மை தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மின்வாரிய ஊழியா்கள் பங்கேற்றனா். இதில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், மின்வாரிய ஊழியா்கள் திரளான அளவில் பங்கேற்றனா்.