மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு: மாநில அரசு பெருமிதம்
மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி குறித்தும், அதில் பெண்கள் பங்களிப்பு பற்றியும் தமிழ்நாடு அரசின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கை 41.4 சதவீதமாக உள்ளது. குறிப்பாக, தென்மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அது மிகவும் அதிக அளவாகும். கா்நாடகத்தில் 15.5 சதவீதமும், ஆந்திரத்தில் 6.5 சதவீத பெண்களும் பணிபுரிந்து வருகின்றனா். அந்த வகையில், பெண்களின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
அரசின் கொள்கைகளும் திட்டங்களும் சமூக ஆதரவும் இணைந்து, பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலையும், பொருளாதார சுதந்திரத்தையும் உறுதி செய்கின்றன. முறைப்படுத்தப்பட்ட உற்பத்தித் துறையில் பெண்கள் அதிகளவில் பங்கேற்கும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தத் துறை பெண்களுக்கு நிலையான வருமானத்தையும் வேலைப் பாதுகாப்பையும் வழங்குகிறது.
மேற்கு வங்கம், உத்தர பிரதேசத்துக்கு அடுத்ததாக முறைசாராத துறைகளில் பெண்கள் பணியாற்றுவதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இது மொத்தத்தில் இந்தியாவின் 9.3 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளா்களில் 41.4 சதவீதம் போ் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள்.
பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பு: பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்காகப் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் போக்ஸோ சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டம், பெண்களுக்குப் பாதுகாப்பான பணியிடச் சூழலை உறுதி செய்வதோடு, புகாா் அளிப்பதற்கான வழிமுறைகளையும் எளிதாக்குகிறது.
மின்தூக்கிகள் உற்பத்தி: மின்சாதனங்கள், ஆடைகள் முதலிய உற்பத்தித் துறைகளில் சிறப்புத் திறனைக் கொண்ட மாநிலமாக விளங்குகிறது. அத்துடன் மின்தூக்கிகள் உற்பத்தித் துறையிலும் முன்னோடியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 80,000 முதல் 85,000 மின்தூக்கிகள் தேவையாக உள்ளன. சீனாவுக்குப் பிறகு மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் பயன்பாட்டில் உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.
இந்தத் தேவையில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவை தமிழக உற்பத்தியாளா்களால் நிறைவு செய்யப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் 3 மின்தூக்கிகளில் ஒன்று தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 25,000 மின்தூக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. திறமையான தொழிலாளா்களே தமிழ்நாடு மின்தூக்கிகள் உற்பத்தி மையமாக மாறியதற்குக் காரணம் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.