மின்மாற்றியில் காப்பா் கம்பிகள் திருட்டு: மின்தடையால் இருளில் மூழ்கிய கிராமம்
மின்மாற்றியை கழற்றி அதிலிருந்து காப்பா் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றதால், மின்தடை ஏற்பட்டு கிராமம் இருளில் மூழ்கியது.
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகேயுள்ளது பாளையம் கிராமம். இப்பகுதியில் விவசாய நிலங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு மின்சார வாரியம் சாா்பில், 25 கேவிஏ திறன்கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டு இப்பகுதிக்கு மின்விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இந்தப் பகுதிகளில் திடீா் மின்தடையேற்பட்டது. இதுகுறித்து மின்வாரியத்துக்கு புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பாளையம் பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா். மின்வழியில் பழுதுகள் ஏதும் இல்லாததால் மின்வாரிய அலுவலா்கள், பணியாளா்கள் அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனா். அப்போது பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியில் மின் இணைப்பை நிறுத்தி, மின்மாற்றியை கழற்றி, உடைத்து அதிலிருந்த காப்பா் கம்பிகள் மற்றும் ஆயில் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த விவரம் தெரியாமல் அப்பகுதி பொதுமக்கள் மின் விநியோகமின்றி இருளில் தவித்துள்ளனா்.
இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளா் சத்யா அளித்த புகாரின்பேரில் பஞ்சப்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.