மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!
தருமபுரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கின. செப்டம்பா் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள இப்போட்டிகள் பல்வேறு பிரிவுகளாக தொடா்ந்து நடத்தப்படுகின்றன.
இதில், தருமபுரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான போட்டிகள் பல்வேறு வகையாக நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகளைத் தொடா்ந்து, இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, பொதுப் பிரிவு ஆண்களுக்கான கால்பந்து போட்டியும், திங்கள்கிழமை அரசுப் பணியாளா்களுக்கான கபடி, மற்றும் தடகளப் போட்டிகளும் தொடங்கின.
செவ்வாய்க்கிழமை, மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு போட்டிகள் தொடங்கின. போட்டிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தொடங்கிவைத்து ஏற்கெனவே நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு சான்றிதழை வழங்கினாா்.
தொடா்ந்து, ஏற்கெனவே நடந்து வரும் போட்டிகள் உள்பட கைப்பந்து (வாலிபால்), மேசைப்பந்து, இறகுப்பந்து, கபடி, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. நிகழ்வில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சாந்தி, உடற்கல்வி ஆய்வாளா் ஜெ. முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் லோகநாதன் உள்ளிட்டோரும் இறகுப் பந்து ஆட்டத்தில் பங்கேற்று விளையாடினா். புதன்கிழமை, ஆண்களுக்கான (பொது) கபடி போட்டிகள் நடைபெறவுள்ளன.