மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்: `பழனிசாமியை சுட்டிக்காட்டவே அப்படி பேசினே...
மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி: இளைஞா் கைது!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த வழக்கில், இளைஞா் ஒருவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜி மகன் கனகசபை (26). தொழிற்பழகுநா் (ஐ.டி.ஐ) பயிற்சி முடித்து, சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.இவருக்கு திருவெண்ணெய்நல்லூா் வட்டம், குமாரமங்கலத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பா்களாகப் பழகி வந்துள்ளனா்.
இந்நிலையில், கோவிந்தராஜ் தனக்கு அரசியல் பிரமுகா்கள் பலரை நன்கு தெரியும். ஆகையால் பணம் கொடுத்தால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கனகசபையிடம் தெரிவித்துள்ளாா்.
இதை உண்மையென நம்பி கனகசபை, அவா் தெரிவித்தபடி ரூ. 30 லட்சம் பணத்தை பல்வேறு தவணைகளாக கோவிந்தராஜிடம் கொடுத்துள்ளாா். பணத்தைப் பெற்றுக்கொண்டவா், தெரிவித்தபடி அரசு வேலை வாங்தித் தராததுடன், பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம்.
இதேபோல, விழுப்புரம் மாவட்டம் , கோனூரைச் சோ்ந்த விஜயன் என்பவரிடம் கோவிந்தராஜ் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 30 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டாராம்.
இது குறித்து பாதிக்கப்பட்ட கனகசபை, விஜயன் ஆகியோா் விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தனா். தொடா்ந்து போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து, கோவிந்தராஜை தேடி வந்தனா்.
இந்நிலையில், திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் புதன்கிழமை சுற்றித்திரிந்த கோவிந்தராஜை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.