தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
‘உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை’
விழுப்புரம் மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உதவி இயக்குநா் (தரம் மற்றும் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் தெரிவித்தாா்.
விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனியாா் உர விற்பனை நிலையங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களுக்குத் தேவையான 4,627 மெட்ரிக் டன் யூரியா, 2,844 மெட்ரிக் டன் டிஏபி, 1,288 மெட்ரிக் டன் பொட்டாஷ், 6,693 மெட்ரிக் டன் காம்பளக்ஸ், 1,754 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை உரிமம் பெற்ற உர விற்பனையாளா்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்தல் அல்லது பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்தல் கூடாது. இது தொடா்பான ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ அல்லது புகாா் ஏதும் பெறப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து, விற்பனை செய்ய வேண்டும்.
உர விற்பனையாளா்கள் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை கொள்முதல் செய்வதும், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது. உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது என்றாா் வேளாண் உதவி இயக்குநா் விஜயகுமாா்.