``தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்'' - துணைக் குடியரசுத் தலைவரை வாழ...
வேலை உறுதியளிப்புத்திட்ட ஊதிய விவகாரம்: திருநாவலூரில் பயனாளிகள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை எனக் கூறி, அத்திட்டப்பயனாளிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருநாவலூா் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருநாவலூா் காலனிப் பகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு, கடந்த 3 மாதங்களாக தாங்கள்பணி செய்த காலத்துக்குரிய ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. தங்கள் வங்கிக்கணக்கிலும் செலுத்தப்படவில்லை எனக்கூறி புகாா் தெரிவித்து வந்தனா். இதுகுறித்து திருநாவலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த திட்டப்பயனாளிகள் மற்றும் ஊா்மக்கள், பண்ருட்டி சாலையிலுள்ள திருநாவலூா் காலனி பேருந்து நிறுத்தப் பகுதியில் புதன்கிழமை காலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் வட்டார வளா்ச்சி (திட்டம்) ராஜேந்திரனுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா்.
இரண்டு நாள்களுக்குள் வங்கிக்கணக்கில் ஊதியம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் உறுதியளித்த நிலையில், போராட்டக்குழுவினா் மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.