PMK: `தலைவராக செயல்பட தகுதியற்றவர்; பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்' - ராமதாஸி...
சஞ்சய் கபூர் ₹30,000 கோடி சொத்து: உயில் குறித்து பிரியா சச்சிதேவ், கரிஷ்மா பிள்ளைகள் வாக்குவாதம்
சஞ்சய் கபூர் விவாகரத்து
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் கபூர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு லண்டனில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் இருந்தனர். அதில் இருவரை அவர் விவாகரத்து செய்துவிட்டார். கடைசியாக மூன்றாவது திருமணமாகப் பிரியா சச்சிதேவ்தான் இறுதி வரை அவருடன் மனைவியாக இருந்தார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
சஞ்சய் கபூர் இரண்டாவது திருமணமாக நடிகை கரிஷ்மா கபூரை மணந்தார். அந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பின்னர் கரிஷ்மா கபூர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.
விவாகரத்து வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. சஞ்சய் கபூருக்கு எதிராக கரிஷ்மா கபூர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தற்போது சஞ்சய் கபூர், ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள கம்பெனியை விட்டுவிட்டு இறந்திருக்கிறார்.

பிரியா சச்சிதேவ்
அச்சொத்துக்கள் அனைத்திற்கும் பிரியா சச்சிதேவ் உரிமை கோர ஆரம்பித்துள்ளார். ஏற்கெனவே சஞ்சய் கபூரின் கம்பெனியில் தன்னை ஒரு இயக்குநராக பிரியா சச்சிதேவ் இணைத்துக்கொண்டுள்ளார்.
இதற்கு சஞ்சய் கபூரின் தாயார் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். தற்போது கரிஷ்மா கபூரின் இரண்டு பிள்ளைகளும் தங்களது தாயார் மூலமாக தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், தங்களது வளர்ப்பு தாய் பிரியா சச்சிதேவ், தங்களது தந்தை சஞ்சய் கபூரின் உயிலில் மோசடி செய்து போலியான உயில் தயாரித்துள்ளார்; அது உண்மையான உயில் அல்ல என்றும், தங்களுக்கும் தந்தையின் சொத்தில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இம்மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிரியா சச்சிதேவ் தரப்பில் அவரது வழக்கறிஞர் ராஜீவ் நாயர் மூலம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி ஜோதி சிங் முன்பு விசாரிக்கப்பட்டது.
பிரியா சச்சிதேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
"இம்மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. நான் தான் சட்டப்பூர்வ மனைவி. உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நீண்ட காலம் நடந்தபோது இந்த அன்பும் பாசமும் எங்கே சென்றது?
பல ஆண்டுகளுக்கு முன்பே கணவர் விட்டுவிட்டார். 2016ஆம் ஆண்டு கரிஷ்மா கபூர், சஞ்சய் கபூரை விவாகரத்து செய்துவிட்டார்.

அளவுக்கு அதிகமான அன்பை உச்ச நீதிமன்றத்தில் சொல்லியிருக்க வேண்டும். அவர் இறந்துவிட்டார்; இப்போது அவர்மீது அனுதாபம் காட்டுங்கள். நான் தற்போது விதவை; நான் தான் அவரது சட்டப்பூர்வ மனைவி.
உங்களது கணவரை விட்டு விட்டு இத்தனை ஆண்டுகளும் எங்கு சென்றீர்கள்? கரிஷ்மாவின் குழந்தைகள் ஆர்.கே. குடும்ப டிரஸ்ட் மூலம் ரூ.1,900 கோடி சொத்துக்களை பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு எவ்வளவு சொத்து போதுமானது என்று எனக்குத் தெரியவில்லை," என குறிப்பிட்டார்.
கரிஷ்மா கபூரின் குழந்தைகள்
கரிஷ்மா கபூரின் குழந்தைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி,
"ஆரம்பத்தில் பிரியா சச்சிதேவ் உயில் எதுவும் இல்லை என்றார். டிரஸ்டில் சிறிது சொத்து இருக்கிறது என்றார். பின்னர் முன்னாள் மற்றும் இன்றைய மனைவிகள் சந்தித்து பேசியபின், டிரஸ்ட் தொடர்பாக டெல்லி தாஜ்மான்சிங் ஹோட்டலில் சந்தித்து பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் திடீரென ஜூலை 30ஆம் தேதி டிரஸ்ட் கூட்டம் நடந்ததாகவும், சஞ்சய் கபூர் எழுதிய உயில் இருப்பதாகவும் கூறினர். 7 வாரங்களாக உயில் இருப்பதையே மறைத்துவிட்டனர். குடும்பக் கூட்டத்தில் திடீரென உயில் பற்றி சொன்னார்கள்.

சஞ்சய் கபூர் இறுதிச்சடங்கிற்கு ஒரு நாளுக்கு முன்பு, பிரியா சச்சிதேவ் கம்பெனியின் நிர்வாக இயக்குநராக அறிவிக்கப்பட்டார். மோசடியான உயில் பதிவு கூட செய்யப்படவில்லை. உயில் நகலை ஏன் குழந்தைகளுக்கு கொடுக்க மறுக்கிறார்கள் என்று புரியவில்லை. உயில் எங்கு இருக்கிறது?" என்று வாதிட்டார்.
இதையடுத்து, சஞ்சய் கபூர் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகள் விபரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய பிரியா சச்சிதேவிற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை வரும் அக்டோபர் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.