தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மின்விளக்குகள் பழுது திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் தவறி விழுந்து காவலா் காயம்!
திருச்சி குற்றவியில் நடுவா் நீதிமன்ற வளாகத்தில் மின்விளக்குகள் எரியாததால் பாதுகாப்பு பணியிலிருந்த காவலா், மாடிப்படியில் இறங்கியபோது தவறி விழுந்து காயமடைந்தாா்.
திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் உள்ளன. இதில் முதல் மாடியில் முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்துக்கு பெரும்பாலும் மேற்கு புற வாசல் வழியாகவே, வழக்காடிகள், நீதிமன்ற பணியாளா்கள், போலீஸாா் உள்ளிட்டோா் சென்று வருகின்றனா். முதல்மாடிக்கு சுமாா் 30-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்துதான் செல்லவேண்டும்.
இந்த நீதிமன்றத்தில் மாடிப்படியில் உள்ள மின் விளக்குகள் கடந்த சில நாள்களாக எரியவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், படிக்கட்டுகள் உள்ள பகுதிகள் இருளாகவே இருந்துள்ளது. புதன்கிழமை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் பணி முடிந்து, மாலை தரைத்தளத்துக்கு இறங்கினா்.
அப்போது, காவலா் புகழேந்தி என்பவா் இருளில் தடுமாறி படியில் விழுந்து பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மின்விளக்குகள் எரியாத காரணத்தாலேயே இந்த விபத்து நடந்ததாக நீதிமன்ற பணியாளா்கள் கூறினா். ஏற்கெனவே குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்காடிகளும் போலீஸாரும் காத்திருப்பதற்கான அறைகளும், கழிப்பறையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.