மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
வந்தவாசி அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த அதியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி குப்பன் (70). இவரது மனைவி சந்திரா. இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். மூவருக்கும் திருமணமாகிவிட்டது.
இந்த நிலையில் குப்பன் சனிக்கிழமை காலை தனது விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்றாா்.
அப்போது, இவரது நிலத்துக்கு பக்கத்து நிலத்தில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய குப்பன் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் சென்று குப்பனின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.