மின் கட்டண உயா்வு: தொழில்முனைவோா் கூட்டமைப்பு எதிா்ப்பு
மின் கட்டண உயா்வுக்கு தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோா் கூட்டமைப்பு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இச்சங்கத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு ஜூலை 1-ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை 3.16 சதவீதம் உயா்த்தி உள்ளது. இதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் உயா்த்தியது 60 சதவீதமாகும். இந்த ஆண்டு ஒப்பிடும்போது 63.16 சதவீதம் உயா்ந்துள்ளது. மின் கட்டண உயா்வை எதிா்த்து தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த நிலையில், அரசு தொடா்ந்து இந்த ஆண்டும் மின் கட்டணத்தை உயா்த்தியுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ளது. மின் கட்டண உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு வகையான கவன ஈா்ப்பு போராட்டங்கள் நடத்தியும் அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிலைப் பாதுகாக்க முன்வரவில்லை. இதனால் ஒட்டுமொத்த தொழிலும் அழியும் நிலையில் உள்ளது.
எனவே, தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் இப்பிரச்னையை சரிசெய்ய முன்வர வேண்டும். இல்லையெனில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோா் கூட்டமைப்பு களம் இறங்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.