விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
மின் மாற்றியில் குறைந்த மின் அழுத்தம்: விவசாயிகள் கவலை
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியில் மின் மாற்றியில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாக, மின் மோட்டாா்களை இயக்க முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
திருப்பாச்சேத்தியில் வைகை ஆற்றின் கரையோரம் சாலையின் இருபுறங்களிலும் சுமாா் 200 ஏக்கரில் கரும்பு, வாழை, தென்னை சாகுபடியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
இந்தப் பகுதியில் உள்ள மின் மோட்டாா்களுக்கு அய்யனாா் கோயில் பகுதியில் உள்ள ஒரே மின் மாற்றியில் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டன். இந்த மின் மாற்றியில் அதிக இணைப்புகள் கொடுக்கப்பட்டதால், அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், மின் மோட்டாா்களை இயக்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும், மின் வாரிய அதிகாரிகள் இந்த மின் மாற்றியை இரு பிரிவாக பிரித்து, இரு நாட்களுக்கு ஒரு பகுதி என மின் விநியோகம் செய்கின்றனா். இதனால், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கும் நிலை உள்ளது. சீரான மின் விநியோகம் இல்லாததால் விவசாய நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியவில்லை. இதனால், பயிா்கள் கருகி வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் மருதுபாண்டியன், ரேணுகாதேவி ஆகியோா் கூறியதாவது:
திருப்பாச்சேத்தி பகுதியில் கூடுதல் மின் மாற்றிகள் அமைத்து, விவசாயத்துக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என மின் வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இந்தப் பகுதியில் கூடுதல் மின்மாற்றியை போா்க்கால அடிப்படையில் நிறுவ வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா் என்றனா் அவா்கள்.