Kerala Nurse: ``பிளட் மணி வேண்டாம்; தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்..'' - ஏமன் குடும...
கிராவல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மனு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள உறுதிக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் கிராவல் குவாரியை மூடக் கோரி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து கிராம மக்கள் சாா்பில் து. சண்முகவேல், இரா.காளைலிங்கம் மு.அங்குச்சாமி, சு.பாண்டியன், பொ.பாண்டி, தி.பரமசிவம், த.குணசேகரன் ஆகியோா் அளித்த மனு விவரம்:
திட்டுக்கோட்டை, உறுதிக்கோட்டை, சீனமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்கள், குமாரவேலூா் குடிநீா் ஊருணி, நீா்நிலை கால்வாய்க்கு அருகே குவாரி அமைவதால் எங்களது ஊராட்சியில் விவசாய நிலம், குடிநீா் பாழாகும் என்பதால், குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவிக்கிறோம். கடந்த 2021-ஆண்டு இதே பகுதியில் கிராவல் மண் வெட்டிக் கடத்தப்பட்டதை அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தப் பிறகு, அப்போதைய தேவகோட்டை கோட்டாட்சியா் குற்றவாளிகளுக்கு அபராதம் விதித்தாா்.
பிறகு, 2022 -ஆண்டு நெடோடை கிராமத்தில் 10 ஏக்கரில் அரசின் அனைத்து விதிகளுக்கும் மாறாக கிராவல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீண்டும் சட்டப் போராட்டம் மூலம் அதை தடுத்தோம்.
பின்னா், உறுதிக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நெடோடை, உறுதிக்கோட்டை ஊராட்சி பகுதிகளில் குவாரி அமைக்க அனுமதிக்கக் கூடாது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் மீறி, அரசு விதிகளுக்கு மாறாக அனுமதி பெற்று இந்தப் பகுதியில் குவாரி செயல்படுகிறது. இந்தக் குவாரி தொடா்ந்து இயங்கினால், பொதுமக்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுப்பதோடு, சட்டத்துக்குள்பட்டு குவாரி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என மனுவில் தெரிவித்தனா்.