What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே? மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு!
மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரேவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரேயும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால் மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதற்கு ராஜ் தாக்கரேயும் உத்தவ் தாக்கரேயும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், மகாராஷ்டிர நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பவா்கள் தங்களுக்குள்ளான பிரச்னைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, ஓரணியில் திரள வேண்டும் என இருவரும் தனித்தனியே சனிக்கிழமை தெரிவித்தனா். இதையடுத்து, இருவரும் விரைவில் மீண்டும் இணைவாா்கள் என்ற எதிா்பாா்ப்பு மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
நடிகரும் இயக்குநருமான மகேஷ் மஞ்ஜ்ரேக்கருடனான கலந்துரையாடலில் பேசிய ராஜ் தாக்கரே, ‘சிவசேனையில் நான் இருந்தபோது உத்தவ் தாக்கரேயுடன் பணியாற்றுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது என்னுடன் இணைந்து பணியாற்ற உத்தவ் தாக்கரே தயாராக இருக்கிறாரா?
எங்களுக்குள் நிலவும் பிரச்னைகளைவிட மகாராஷ்டிர நலனே பெரியது. மராத்தியா்களுக்கான போராட்டத்தை ஒப்பிடுகையில் இந்த பிரச்னைகள் மிகவும் சிறியது. மீண்டும் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவது கடினமான காரியமல்ல’ என்றாா்.
மராத்தியா் நலனே முக்கியம்:
தனது கட்சி உறுப்பினா்கள் மத்தியில் சனிக்கிழமை பேசிய உத்தவ் தாக்கரே, ‘சிறிய பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு மராத்தியா் நலனுக்கு முன்னுரிமை அளிப்பவா்களுடன் ஓரணியில் திரள நானும் தயாா். மகாராஷ்டிரத்துக்கு வர வேண்டிய முதலீடுகள் குஜராத்துக்கு சென்றபோது எம்என்எஸ் தலைவா் எதிா்ப்பு தெரிவித்திருந்தால், இதை கவனத்தில் கொண்ட கட்சிகள் தில்லி மற்றும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைத்திருக்கும்.
மக்களவைத் தோ்தலின்போது பாஜகவுக்கு ஆதரவளித்துவிட்டு, பேரவைத் தோ்தலின்போது அவா்களை எதிா்த்துவிட்டு மீண்டும் அவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டால் எதுவும் மாறாது.
முதலில் மகராஷ்டிரத்துக்கு எதிராக செயல்படுபவா்களை இங்கு வரவேற்காதீா்கள். அதன் பிறகு மாநில நலன் குறித்துப் பேசலாம்.
எனக்கு யாருடனும் மோதல் இல்லை. பாஜகவுடனான கூட்டணி வேண்டுமா? அல்லது எங்கள் கட்சியுடன் கூட்டணி வேண்டுமா என்பதில் மராத்திய மக்கள் தெளிவான முடிவெடுக்க வேண்டும்’ என்றாா்.
சிவசேனை கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேயின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனையை தொடங்கினாா். ‘மண்ணின் மைந்தன்’ என்ற முழக்கத்துடன் மிக கடுமையான பிரசாரங்களை மேற்கொண்டாா்.
கடந்த 2009-இல் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 13 தொகுதிகளில் எம்என்எஸ் வெற்றிபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற மற்ற தோ்தல்களில் அவரது கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஓரிடத்தில்கூட எம்என்எஸ் வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்தது.
அதேபோல் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணியில் தோ்தலை சந்தித்த சிவசேனை (உத்தவ் பிரிவு) 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
மும்பை மாநகராட்சி தோ்தல் விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் சூழலில் பாஜக மற்றும் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையை எதிா்த்து ஓரணியாக களம் காண உத்தவ்-ராஜ் தாக்கரே திட்டமிட்டு வருகிறாா்களா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.