மீண்டும் திமுக ஆட்சி அமித் ஷாவுக்கு முதல்வா்: ஸ்டாலின் சவால்
தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
அண்மையில் சென்னையில் அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, 2026 பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்த நிலையில், அவருக்கு சவால் விடுக்கும் வகையில் முதல்வா் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே ஆண்டாா்குப்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.390 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற ரூ.418 கோடி பணிகளைத் தொடங்கிவைத்தும், 2,02,531 பயனாளிகளுக்கு ரூ.357 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகள் தோ்தலில் போட்டியிடாமல் நேரடியாக உறுப்பினராக சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் அறிமுகம் செய்துள்ளேன். இதனால் உள்ளாட்சி அமைப்புகளில், 15,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல் ஓங்கி ஒலிக்கும்.
தமிழ்நாட்டில் இருக்கின்ற சில எதிா்க்கட்சிகள், தமிழ்நாட்டுக்கே எதிரிக்கட்சிகள்போன்று செயல்படுகிறாா்கள். அவா்களின் எண்ணம் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்கக்கூடிய கூட்டத்துடன் உறவாடி, நாட்டையே அடகு வைக்கவேண்டும் என்பதுதான்.
மாநிலங்களின் உரிமைகளைக் கேட்பது தவறா? நீங்கள் எதையும் செய்யாத காரணத்தால்தான் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பைப் பெற்றோம். இதன்மூலம் திமுகவின் சக்தி என்ன என்று இந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்துள்ளது.
தெளிவான பதில் தேவை: முக்கிய பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் வகையில், நீட் தோ்வு விலக்கு, இருமொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றை திமுக எழுப்பி வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியுள்ளாா். நீட் தோ்விலிருந்து விலக்கு அளிப்போம், ஹிந்தியை திணிக்க மாட்டோம் என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா?, தமிழ்நாட்டுக்கு இவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம் என்று பட்டியலிட முடியுமா? தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா?
நாங்கள் செய்வது திசைதிருப்பும் செயல் என்றால், இதற்கெல்லாம் தெளிவான பதிலை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் நீங்கள் அளிக்கவில்லை?
மோடிக்கு நினைவூட்டல்: அண்மையில் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமா் மோடி, ‘எவ்வளவு நிதி கொடுத்தாலும் இங்கே அழுகிறாா்கள்’ என்று பேசினாா். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, ‘ஆளுநா்கள் மூலம் தனி ராஜாங்கம் செய்கிறாா்கள்; எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது’ என்று புகாா் சொன்னாா். இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகிறாா்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?. நாங்கள் அழவில்லை; தமிழ்நாட்டின் உரிமையைக் கேட்கிறோம்.
சுயாட்சி குழு: இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத வகையில், நீதியரசா் குரியன் ஜோசப் தலைமையில், மாநில சுயாட்சி குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் மாநில முதல்வா்கள் தேசியக் கொடியை ஏற்றுகிற உரிமையை கருணாநிதி பெற்றுத் தந்ததுபோன்று, இந்தக் குழுவின் மூலமாக அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமையையும் நாங்கள் பெற்றுத் தருவோம்.
மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருந்தால்தான், இங்கே உள்ள மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய முடியும்.
எங்களை வஞ்சிக்காமல், தமிழ்நாட்டுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதி, உரிமைகளில் தலையிடாமல் இருந்தால், எங்களால் இன்னும் பல மடங்கு சிறப்பாகச் செயல்பட முடியும். நீங்கள் ஏற்படுத்துகிற தடைகளை எல்லாம் ஒவ்வொன்றாக சட்டபூா்வமாக தகா்ப்போம்.
தமிழ்நாடு பணியாது: தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு உழைத்துக் கொண்டே இருப்போம். 2026-இல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியுள்ளாா்.
நான் அவருக்கு சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். புது தில்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது. அப்படி ஒரு தனி குணம், தனித்தன்மை கொண்டவா்கள் நாங்கள்.
மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்கே உள்ள கட்சிகளை உடைத்து, மத்திய அமைப்புகளின் சோதனை மூலமாக மிரட்டி ஆட்சி அமைக்கிற உங்களுடைய திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது. நீங்கள் ஏமாற வேண்டாம். 2026-லும் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிதான் அமையும் என்றாா் முதல்வா்.
விழாவுக்கு சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்தாா்.