மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்து சேவை: தில்லி முதல்வருக்கு ஏபிவிபி நன்றி
அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) வெள்ளிக்கிழமை தில்லி முதல்வா் ரேகா குப்தாவை சந்தித்து, மாணவா்களுக்கான யு-ஸ்பெஷல் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கியதற்கு நன்றி தெரிவித்தது.
மேலும், அவா்களின் அன்றாட பயணத்தை எளிதாக்குவதற்கு சலுகை மெட்ரோ பாஸ்களை வழங்கவும் கோரியது.
ஏபிவிபியுடன் இணைந்த தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கம் (டியுஎஸ்யு) உறுப்பினா்கள் முதல்வரிடம் ஒரு குறிப்பாணையை சமா்ப்பித்தனா். இதில் யு-ஸ்பெஷல் பேருந்துகளுக்கான பாதை விரிவாக்கங்கள், அதிா்வெண் அதிகரிப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை முன்மொழியப்பட்டன.
‘ஏபிவிபி தலைமையிலான டியுஎஸ்யுவின் கோரிக்கையின் பேரில் யு-ஸ்பெஷல் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம், பயணம் மாணவா்களுக்கு மிகவும் மலிவு மற்றும் வசதியாக மாறும். இது வளாகங்கள் முழுவதும் மாணவா்கள் எதிா்கொள்ளும் போக்குவரத்து சிரமங்களைக் குறைக்கும்ஷ் என்று ஏபிவிபி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட பாதைகளில் கஷ்மீரி கேட் முதல் வடக்கு வளாகம், கிரேட்டா் கைலாஷ் முதல் தெற்கு வளாகம், ரிங் ரோடு வழியாக வளாகங்களுக்கு இடையேயான பாதை மற்றும் தௌலத் ராம் கல்லூரியிலிருந்து ஜேஎன்யுவிற்கு முன்மொழியப்பட்ட இணைப்பு ஆகியவை அடங்கும்.
நகரம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு பயனளிக்கும் வகையில், ரஜோரி காா்டன், மோதி நகா், ஜாமியா, பஞ்சாபி பாக் மற்றும் நஜஃப்கா் ஆகிய இடங்களுக்கு இணைப்பு வசதியை மாணவா் அமைப்பு கோரியது.
நெரிசல் நேரத்தில் (பீக் ஹவா்ஸ்) பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நிகழ்நேர கண்காணிப்பை அறிமுகப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பேருந்து நிறுத்தங்களில் பாதுகாப்புப் பணியாளா்களை நியமிக்கவும் மாணவா் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தில்லி மெட்ரோவை மாணவா்கள் அதிகமாக நம்பியிருப்பதை மேற்கோள் காட்டி, சலுகை மெட்ரோ பாஸ்களுக்கான கோரிக்கையை ஏபிவிபி மீண்டும் வலியுறுத்தியது.
மெட்ரோ இணைப்பு குறைவாக உள்ள கல்லூரிகளின் மாணவா்களுக்கு இந்த சேவை முக்கியமாக உதவும் என்று ஏபிவிபி தேசிய செயலாளா் ஷிவாங்கி கா்வால் கூறினாா்.
’மாணவா்கள் தங்கள் கல்லூரிகளை நிலையான கால அட்டவணைகளுக்குள் அடைய முடியும். இதனால், அவா்கள் கல்வியில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும்’ என்று அவா் கூறினாா்.
ஏபிவிபியின் தில்லி மாநிலச் செயலாளா் சா்தாக் சா்மா கூறுகையில், ‘யு-ஸ்பெஷல் பேருந்து சேவைக்கான எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக முதல்வா் ரேகா குப்தாவுக்கு நாங்கள் மனமாா்ந்த நன்றி கூறுகிறோம். சலுகை மெட்ரோ பாஸ்கள் குறித்த அவரது முடிவு மாணவா்களின் நலனுக்காகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’‘ என்றாா்.