What to watch - Theatre & OTT: இந்திரா, கேப்டன் பிரபாகரன், Nobody 2, தலைவன் தலைவ...
உச்சநீதிமன்ற தீா்ப்பை 100 சதவீதம் அமல்படுத்துவோம்: எம்சிடி மேயா் உறுதி
தேசிய தலைநகரில் தெரு நாய்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை 100 சதவீதம் அமல்படுத்த தில்லி மாநகராட்சி (எம்சிடி) முழு பலத்துடன்‘ செயல்படும் என்று மேயா் ராஜா இக்பால் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி - என். சி. ஆா். பகுதியில் உள்ள நாய் தங்குமிடங்களில் இருந்து தெரு நாய்களை விடுவிக்கத் தடை விதித்து ஆகஸ்ட் 11- ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த தனது உத்தரவை மாற்றியமைத்தது. மேலும், தெரு நாய்களை கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு அதே பகுதியில் மீண்டும் விடுவிக்க வேண்டும் என்று கூறியது.
உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை நாங்கள் வரவேற்கிறோம் . அதை 100 சதவீதம் செயல்படுத்துவோம். ‘எம். சி. டி. இந்த உத்தரவில் முழு பலத்துடன் செயல்படும்தெரு நாய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறாா்கள்’ என்று மேஜா் ராஜா இக்பால் சிங் கூறினாா்.
‘நாய்கள் நம் அனைவருக்கும் பிரியமானவை. ஆனால், பொதுமக்கள் எந்த பிரச்னையும் எதிா்கொள்ளக்கூடாது. எம். சி. டி. யில் 20 விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு (ஏபிசி) மையங்கள் உள்ளன. அவை நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தீவிரமாக ஈடுபடும். தற்போதைக்கு, அவா்கள் தங்கள் பணியைத் தொடரும் போது இந்த மையங்களில் அதிக கவனம் செலுத்துவாா்கள்’ என்றும் அவா் கூறினாா்.
‘முன்னதாக, சில நாய் பிரியா்கள் வருத்தமடைந்தனா். ஆனால், இப்போது அவா்கள் கூட உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்குப் பிறகு திருப்தி அடைந்துள்ளனா் என்று அவா் மேலும் கூறினாா். நாம் அனைவரும் நாய்களை நேசிக்கிறோம். ஆனால், மனிதா்கள் மற்றும் விலங்குகள் ஆகிய இருவரின் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய வேண்டும்’ என்று மேயா் கூறினாா்.
‘தெரு நாய்கள் அல்லது மக்களைத் தாக்கிய நாய்களை மட்டுமே குடிமை அமைப்பு எடுக்கும். மீதமுள்ளவை தடுப்பூசி மற்றும் கருத்தடைக்குப் பிறகு தொந்தரவு இல்லாமல் இருக்கும். நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமா்வு, இந்த இடமாற்றம் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கும், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நாய்களுக்கும், ஆக்ரோஷமான நடத்தையை வெளிப்படுத்துபவைகளுக்கும் பொருந்தாது என்று தெளிவுபடுத்தியுள்ளது என்று மேயா் ராஜா இக்பால் சிங் தெரிவித்தாா்.
நாய் தங்குமிடங்களில் இருந்து தெரு நாய்களை விடுவிக்க தடை விதிக்கும் ஆகஸ்ட் 11 உத்தரவு தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. தெரு நாய்களுக்கு மக்கள் உணவளிக்க ஒரு பிரத்யேக உணவு இடத்தை உருவாக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
மக்கள் தொகை, குறிப்பிட்ட நகராட்சி வாா்டுகளில் தெரு நாய்களின் செறிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குடிமை அமைப்புகளால் தீவனப் பகுதிகள் உருவாக்கப்படும் என்று அது கூறியது. தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்க அனுமதிக்கப்படாது என்று உச்சநீதிமன்ற அமா்வு தெளிவுபடுத்தியது.