மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் வ...
மீன ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்
மீன ராசியில் பிறந்த நீங்கள், பகைவருக்கும் உதவும் பண்பாளர். நேர்மையுடன் உழைத்து முன்னேறும் கொள்கைப் பிடிப்புள்ளவர்; சிக்கனவாதி. உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லிய பலன்கள் - 25 குறிப்புகள் இங்கே!
1. மீன ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் 2025 புத்தாண்டு பிறக்கிறது. கடின உழைப்பால் காரியம் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும்.
2. இதுவரையிலும் தடைப்பட்ட வேலைகளை, இந்தப் புத்தாண்டில் சமயோஜிதமான பேச்சால் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். செயல்வேகமும் ஆளுமைத் திறனும் கூடும்.
3. `பழைய கடனை எவ்வாறு அடைக்கப்போகிறோமோ’ என்ற கவலை இனி இல்லை. நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும்.
4. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளை அரவணைத்துப் போவீர்கள். மகனுக்குத் தடைகள் நீங்கி, கல்யாணம் கூடிவரும்.
5. செவ்வாய் 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.
6. இந்த ராசிக்காரர்கள், இந்தப் புத்தாண்டில் பேச்சில் அதீத கவனம் செலுத்தவேண்டும். வரம்பு மீறி எவரையும் விமர்சிக்கவேண்டாம்.
7. உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். சகோதரியின் கல்யாணத்தைப் போராடி முடிப்பீர்கள். பூர்விகச் சொத்துப் பிரச்னையை முடிந்த வரை பேசித் தீர்ப்பது நல்லது.
8. புத்தாண்டின் தொடக்கம் முதல் 25.4.2025 வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத்திணறல், அல்சர், ரத்த சோகை வந்து செல்லும்.
9. கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். வாழ்க்கைத்துணவருடன் சிறு பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். விட்டுக்கொடுத்துப் போகவும். முன்கோபத்தைத் தவிர்க்கப்பாருங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்து நீங்கும்.
10. 26.4.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி, 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் அமர்வதால் மனப் போராட்டங்கள் ஓயும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.
11. ஊரில் பொது விசேஷங்கள், கோயில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள்.
12. ஷேர் மூலம் பணம் வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வேற்று மதத்தவர், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
13. சனி 12-ல் மறைந்து விரயச் சனியாக உலவும் நிலை. அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.
14. பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சிலரது போலித்தனத்தை எண்ணி வருந்துவீர்கள். அதேபோல், கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்து விடுமோ என்ற அச்சம் வரும். எனினும் உரிய தருணங்களில் நல்ல தீர்வு கிடைக்கும்.
15. சில தருணங்களில் உள்ளுணர்வின் எச்சரிக்கையைத் தட்டிக்கழித்துவிட்டோமே என்று எண்ணியும் ஆதங்கப்படுவீர்கள். கூடா பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறுவது நல்லது.
16. ஆண்டின் தொடக்கம் முதல் 10.5.2025 வரை குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும்.
17. மே- 11 முதல் வருடம் முடியும் வரை, குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால், இழுபறியாக இருந்த காரியங்கள் எல்லாம் முடிவடையும்.
18. குருவின் சஞ்சாரப்படி தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், மாமன், அத்தைவழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.
19. சொத்து வாங்கும்போது, சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து தாய்ப்பத்திரம், வில்லங்கச் சான்றிதழ்களைச் சரிபார்த்து வாங்குங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும்.
20. வியாபாரிகளே! சந்தை நிலவரங்களை விரல்நுனியில் வைத்துக்கொண்டு, அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். பர்னிச்சர், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு.
21. வியாபார ஏற்றுமதி, இறக்குமதி, வரித்தாக்கல் போன்றவற்றில் அரசு கெடுபிடிகள் தளரும். வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்த புதுச் சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாள்கள் மற்றும் கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து போவார்கள். பழைய பங்கு தாரர்கள் தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.
22. உத்தியோகஸ்தர்களே! எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுப் பார்த்தும் உங்களைக் குறைசொல்வதற்கென்றே ஒரு கூட்டம் இருந்ததே... இனி, அந்த நிலை மாறும். உங்களின் மதிப்பு மரியாதை கூடும்.
23. அரசுத்துறையினருக்கு, பழைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். முக்கிய கோப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தருவதாக இருக்கும். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.
24. கணினித் துறையினருக்கு, வேலையில் திருப்தியில்லாமல் போகும். அயல்நாட்டு வாய்ப்புகள் வந்தால், யோசித்து ஏற்பது நல்லது.
25. குடும்பத்துடன் ஒருமுறை திருவரங்கம் சென்று பெருமாளை தரிசித்து வாருங்கள். சனிக்கிழமையில் சென்று துளசி சமர்ப்பிப்பது விசேஷம். ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று வீட்டில், குலதெய்வத்துக்கு சிறப்பு வழிபாடு செய்யுங்கள்; தடைகள் நீங்கி சகல சுபிட்சங்களும் உண்டாகும்.