முகமது நபி பற்றி அவதூறு பரப்பிய 5 பேருக்கு மரண தண்டனை!
இஸ்லாமிய இறைத்தூதரான முகமது நபி பற்றி இணையத்தில் அவதூறு பரப்பிய 5 பேருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானில் கடவுளை நிந்தனை செய்வது மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் இதுதொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூட பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
பாகிஸ்தானில் உள்ள தனியார் அமைப்புகள் இணையத்தில் இஸ்லாம் குறித்து அவதூறு பரப்பும் இளைஞர்கள் மீது தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் அமைப்பு அளித்தப் புகாரின் பேரில் இணையத்தில் இறைத்தூதர் முகமது நபி பற்றி அவதூறாகப் பதிவிட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தானின் ராவல்பிண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனித்தனியே அனைவருக்கும் ஆயுள் தண்டனையும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக கூடுதலாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளன.
ஐந்து பேரில் ஒருவர் மட்டும் ஆப்கனைச் சேர்ந்தவர்.
இவர்கள் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டபோதும் பாகிஸ்தான் அரசு இதுவரை யாருக்கும் தண்டனையை நிறைவேற்றவில்லை.
மேலும், இதுபோன்று நூற்றூக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்குகளில் கடந்த அக்டோபர் மாதம் வரை 767 பேர் சிறையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.