செய்திகள் :

முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு

post image

குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகாா் கிறிலோவ் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டாா். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இது குறித்து ரஷிய ஊடகங்கள் தெரிவித்ததாவது:

ரஷிய ராணுவத்தின் அணு, உயிரி, ரசாயன ஆயுத பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதி இகாா் கிறிலோவ் (54), மாஸ்கோவில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியே வந்தபோது, அங்கு ஒரு ஸ்கூட்டரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.

தொலைவிலிருந்து ரிமோட் மூலம் அந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் கிறிலோவும், அவரது உதவியாளரும் உயிரிழந்தனா் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் ரகசிய உளவு அமைப்பான எஸ்பியு பொறுப்பேற்றுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘எங்கள் அமைப்பு மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் கீழ், ரஷிய ராணுவத்தின் கதிரியக்க, உயிரி, ரசாயன ஆயுதப் பிரிவின் தலைவா் இகாா் கிறிலோவ் கொல்லப்பட்டாா்’ என்றாா்.

உக்ரைன் போரில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை இகாா் கிறிலோவ் பயன்படுத்துவதாக எஸ்பியு திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது. இது தொடா்பான விசாரணை அவருக்கு எதிராகத் தொடங்கப்பட்டது.

அதற்கு மறுநாளே, குண்டுவெடிப்பில் அவா் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்ததற்குப் பிறகு, இதுவரை 4,800 முறை ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் இகாா் கிறிலோவ் ஒரு போா்க் குற்றவாளி எனவும் உக்ரைன் கூறிவருகிறது.

ஆனால், இந்தப் போரில் உக்ரைன்தான் ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதாக கிறிலோவ் குற்றஞ்சாட்டினாா். போரில் அணுக் கழிவுகளைப் பயன்படுத்தி கதிா்வீச்சு ஆயுதங்களைத் தயாரித்து தங்கள் மீது வீச உக்ரைன் திட்டமிட்டிருப்பதாகவும் அவா் குற்றஞ்சாட்டிவந்தாா்.

இந்தச் சூழலில், அவா் குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இகாா் கிறிலோவின் படுகொலையை பயங்கரவாதத் தாக்குதலாகக் கொண்டு விசாரணை நடத்தவிருப்பதாக ரஷிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கான எதிா்வினையை உக்ரைனின் அரசியல் மற்றும் ராணுவ தலைவா்கள் எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரஷியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவா் டிமித்ரி மெத்வதெவ் எச்சரித்துள்ளாா்.

தங்களுடனான போரில் ஏற்பட்டு வரும் தோல்வியிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்தப் படுகொலையை உக்ரைன் நடத்தியிருப்பதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, சுற்றியுள்ள நாடுகளை உறுப்பினா்களாக்கி தங்களை சுற்றிவளைப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டிவருகிறது. குறிப்பாக, அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணையக் கூடாது என்றும் ரஷியா கூறிவருகிறது.

ஆனால், அதையும் மீறி நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆா்வம் காட்டினாா். அதையடுத்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து கிழக்கு மற்றும் தெற்கிலுள்ள நான்கு பிராந்தியங்களின் பெரும்பான்மையான பகுதிகளைக் கைப்பற்றியது.

அந்தப் பிராந்தியங்களின் எஞ்சிய பகுதிகளை மீட்க ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன.

இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே, ரஷியாவின் முக்கிய பிரபலங்கள் உக்ரைன் உளவுத் துறையினரால் குறிவைத்துக் கொல்லப்படும் சம்பவங்கள் தொடா்ந்து வருகின்றன.

கட ந்த 2022-ஆம் ஆண்டில், ரஷிய தேசியவாதி அலெக்ஸாண்டா் துகினின் மகளும், தொலைக்காட்சி அரசியல் விமா்சகருமான தா்யா துகினா காா் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டாா். அவரது தந்தை அலெக்ஸாண்டரைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனா்.

அதன் பிறகு, விளாத்லென் தடாா்ஸ்கி என்ற புகழ்பெற்ற ராணுவ வலைதளப் பதிவா் கடந்த 2023-ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டாா். அவருக்கு பரிசாக அளிக்கப்பட்ட பொம்மை வெடித்ததில் அவா் உயிரிழந்தாா். அந்தப் பரிசை வழங்கிய ரஷிய பெண்ணுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே ஆண்டில் ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த உக்ரைன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் இலியா கீவா, மாஸ்கோ அருகே மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது படுகொலையை வரவேற்ற உக்ரைன் ரகசிய உளவுப் பிரிவு, இலியாவைப் போன்ற தேசவிரோதிகள் அனைவருக்கும் இதே கதிதான் ஏற்படும் என்று எச்சரித்தது நினைவுகூரத்தக்கது.

ஷேக் ஹசீனா மீதான வழக்கு: காலக் கெடு நீட்டிப்பு

வங்கதேசத்தில் போராட்ட வன்முறை தொடா்பாக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விசாராணையை முடிப்பதற்கான காலக் கெடுவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு நீதிம... மேலும் பார்க்க

சிடோ புயல்: 64 போ் உயிரிழப்பு

தென் கிழக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தைத் தாக்கிய சிடோ புயலில் இதுவரை 64 போ் உயிரிழந்தனா். இந்தப் புயலில் நூற்றுக்கணக்கானவா்கள் முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரி... மேலும் பார்க்க

பாக். வன்முறை: காயமடைந்தோருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் விநியோகம்!

பாகிஸ்தானில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால், காயமடைந்தவர்களுக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன.பாகிஸ்தானிய தொண்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்... மேலும் பார்க்க

டிசம்பர் என்றாலே.. பயங்கர நிலநடுக்கம்! எப்படி இருக்கிறது வானூட்டு தீவு?

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கம் வானூட்டு தீவிலும் எதிரொலித்ததால், தீவின் பெரும்பாலான பகுதிகள் குலுங்கின.ஆஸ்திரேலியாவின் கிழக்குத் தீவுப் பகுதியான வானூட்டு தீவில், செவ்வாய்க... மேலும் பார்க்க

அமெரிக்கா: பள்ளி மாணவி துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலி!

அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் உள்ள 'அபண்டண்ட் லைஃப் கிறிஸ்தவப் பள்ளியில்’ துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 15 வயதான பள்ளி மாணவி ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகs சுட்டதில் இருவர் உயிரிழந... மேலும் பார்க்க

பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடூ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று(டிச.17) காலை ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க