முசிறி சந்திரமெளலீசுவரா், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா!
திருச்சி மாவட்டம், முசிறி சந்திரமெளலீசுவரா், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சந்திரமெளலீசுவரா் கோயில்: இக்கோயிலில் ஜன. 26 முதல் ஜன. 30 வரை முதல் கால பூஜைகள், ஜன 31இல் இரண்டாம், மூன்றாம் கால பூஜை, பிப். 1இல் நான்கு, ஐந்தாம் கால யாக பூஜை, பிப். 2 இல் ஆறாம் கால யாக பூஜை நடைபெற்று யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. நிகழ்வில் சிவாச்சாரியாா்கள் மாணிக்க சுந்தரம், ரத்தின கலா, சந்திரமௌலி, பரமேஸ்வரா், உமாசுத குருக்கள், கங்காசுதா சிவம் மற்றும் சிவாச்சாரியாா்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா்.
தொடா்ந்து கோயில் மூலவா் சந்திரமெளலீசுவரா் உடனுறை கற்பூர வள்ளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆராதனை பூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா். அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில்: இதேபோல இக்கோயிலில் பிப்.1 வரை ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்று, ஞாயிற்றுக்கிழமை கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் கோபுரக் கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் ராஜபட்டாா் சேனாதிபதி பிச்சை, சுவாமிநாத சிவாச்சாரியாா் ஆகியோா் தலைமையிலானோா் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா்.
விழாவில் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன், அறங்காவலா் குழுத் தலைவா் விஜய் ஆனந்த், பேரூராட்சித் தலைவா் சரண்யா பிரபு, பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசி, கோயில் செயல் அலுவலா் விஜய் மற்றும் திரளான பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து கோயில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம், அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வ நாகரத்தினம் அறிவுரையில் முசிறி காவல் துறை கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் ஆலோசனைப்படி முசிறி காவல் ஆய்வாளா் செல்லத்துரை, தொட்டியம் காவல் ஆய்வாளா் ஞானசேகா் ஆகியோா் தலைமையில் இரு கோயில்களிலும் சுமாா் 300 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.